அன்னதானம்
பசி என்ற நெருப்பு ஏழை எளியவர்களின் தேகத்தில் பற்றி எரிகின்ற போது அதை நீக்க எடுக்கப்படும் முயற்சிதான் ஜிவகாருண்யம் என்பது இராமலிங்க அடிகளாரின் வாக்கு. அந்த கருத்தை வலியுறுத்திய வள்ளுவர் பெருமகனார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப்புழி
மனதின் ஞாலத்து வாழ்வோருக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே
மணிமேகலையில் பசிப்பிணியைப் போக்குவோர் உயிர் கொடுத்தோராகவும், ஒப்பற்ற புகழுக்கு சொந்தக்காரர்கள் என்று விளம்புகின்றார்.
"பசி வந்திட குடிப்பிறப்பு, விழுப்பம், கல்வி, நாணம், புகழ், அழகு, சிற்றின்பம், அறிவு, பக்தி, இன்பம் ஆகிய பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி."
உயிராகிய ஒளி பசியால் குறைவது என்பது கடவுளாகிய ஒளி நம் உடலை விட்டே விலகுவதே ஆகும், அதனால் தான் அன்னத்தை "பிரம்மம்" என்று வேதம் கூறுகிறது. தன்பசியாற்றிக் கொள்வதோடு பிறர் பசியாற்றும் பண்புடையது மனித உயிர்.

ஒவ்வொரு நாளும் சித்தர் ஆசிரமத்திற்கு யாத்திரீகர்கள், துறவிகள், திக்கற்றவர்கள் என பல தரப்பட்டவர்கள் வந்து வழிபாடு நிகழ்த்தி இரவு சித்தர் ஆசிரமத்திலேயே தங்குகின்றனர்.
இந்த ஆசிரமத்தில் நாள்தோறும் தங்குவோர் எத்தனை பேராயினும் அத்தனை பேருக்கும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
திக்கற்றோருக்குத் தங்கும் இடமும்,
பசித்தாருக்கு உணவும்,
நோயுற்றார்க்கு மருந்தும் நல்கி வாழ்விப்பதே சைவ சமய நெறியாகும்.
இதுவே சித்தர்கள் போற்றிய சீரிய நெறியும் ஆகும். சித்தர்கள் பலருள்ளும் கோரக்கர் சித்தர் இந்நெறியில் தலை நின்ற அருட்பெருஞ் சான்றோராவர்.
அவர் ஜீவ சமாதி கூடியுள்ள இந்த ஆசிரமத்தில் பசித்த வயிற்றோடு படுத்து உறங்கியவர் எவரும் இல்லை
அன்னக்காவடி மரபு
தினமும் வீடு தோறும் அன்னம் சேகரித்து கோரக்கர் சித்தருக்கு நிவேதனம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கும் சிவனடியார்களுக்கும் வழங்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடரும் பக்தி மரபான இது, தானம் மற்றும் தர்மத்தின் உயர்ந்த அடையாளமாக இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பல நூற்றாண்டுகளாக தொடரும் கோரக்கர் சித்தரின் அன்னக்காவடி மரபு
அன்னக்காவடி தருமம் தாயே! நாள்தோறும், இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கக் கோரக்கச் சித்தர் ஆலயத்தில் சிறப்பான ஒரு நெறி பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாசிரமத்தின் தலைமப் பூசாரியோ, அன்றி அவரின் உதவியாளர்களில் ஒருவரோ மாலை 7.00 மணி அளவில் தம் தோளில் ஓர் அன்னக்காவடியை ஏந்தி இவ்வூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் உள்ள இல்லங்களுக்கு செல்வார். காவடியின் இருபக்கங்களிலும் பெரிய பானைகள் உரியில் வைக்கப் பெற்றிருக்கும். இரண்டு அன்னக்காவடி தம் இல்லத்தின் வாயிலில் வந்து நின்றவுடன், புதிதாக இரவில் சமைத்த சோற்றினை ஒரு தட்டில் எடுத்து வந்து அவ்வில்லத்துப் பெண்கள் அன்னக்காவடிப் பானையில் இடுகின்றனர். ‘அன்னக்காவடி தருமம் தாயே’ என்று கூறி வரும், இவ்வன்னக்காவடிக்கு அங்கு வாழ்ந்து வரும் அனைவரும் அன்னம் பாலிக்கப்படுகிறது.
உங்கள் பங்களிப்பு
வடை பாயாசத்துடன் சிறப்பு அன்னதானம்
சிறப்பு பூஜை செய்ய கட்டணம்
அன்னதானம், சிறப்பு பூஜை செய்ய விரும்பும் உள்ளவர்கள் அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
